வாட்ஸ்அப்-இல் உங்களை ஒருவர் தடை (Block) செய்துள்ளாரா? அறிந்துகொள்வது எப்படி?
வாட்ஸ்அப் சேவையில் குறிப்பிட்ட ஒரு நபரை தடை (Block) செய்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட ஒருவரை தடை (Block) செய்யும்போது அவரை தடை செய்ததற்கான எந்த ஒரு அறிவிப்பும் அவருக்கு அறியப்படுத்தப்படமாட்டாது.
இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து நீங்கள் இன்னுமொருவரால் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து அடையாளங்களும் உங்களுக்கு பொருந்தும் எனின் தடைசெய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம்.
இறுதியாக வாட்ஸ்அப் பயன்படுத்திய நேரம்.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒருவர் இறுதியாக வாட்ஸ்அப்பயன்படுத்திய நேரத்தை ஏனையவர்களால் அறிந்து கொள்வதற்கான வசதி (Last Seen) வாட்ஸ்அப் சேவையில் உண்டு. உங்களை குறிப்பிட்ட நபர் தடை செய்திருந்தால் அவர் இறுதியாக வாட்ஸ்அப் பயன்படுத்திய நேரத்தை உங்களால் அறிய முடியாது.
எனினும் இதனை மாத்திரம் வைத்து உங்களை அவர் தடை செய்துள்ளார் என்ற முடிவுக்கு வர முடியாது. காரணம் தாம் வாட்ஸ்அப் சேவையை இறுதியாக பயன்படுத்திய நேரத்தை ஏனையவர்களால் அறிந்துகொள்ள முடியாதவாறு அமைத்துக் கொள்வதற்கான வசதி வாட்ஸ்அப் சேவையில் தரப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சுயவிபர பகுதியில் உள்ள அவரது புகைப்படம்.
வாட்ஸ்அப் பயனர்களால் தமது சுயவிபர பகுதியில் அவரது புகைப்படத்தை இணைத்துக்கொள்ளவும் அதனை ஏனையவர்களால் பார்க்கவும் முடியும். இருப்பினும் உங்களை யாராவது தடை செய்திருப்பின் அவர்களின் புகைப்படத்தை உங்களால் பார்க்க முடியாது.
இதனை மாத்திரம் வைத்தும் உங்களை அவர் தடை செய்துள்ளார் என்பதை உறுதி செய்ய முடியாது. காரணம், அவர் தாம் இட்டிருந்த சுயவிபர படத்தை நீக்கியிருக்கலாம் அல்லது சிலர்கள் தமது புகைப்படத்தை இடாமலே வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவதும் உண்டு.
வாட்ஸ்அப் குரல் அழைப்பு
வாட்ஸ்அப் மூலம் குரல் அழைப்புக்களை மேற்கொள்ள முடிகின்றமை நாம் அனைவரும் நன்கறிந்த விடயமே. இருப்பினும் வாட்ஸ்அப் சேவையில் உங்களை ஒருவர் தடை செய்திருந்தால் அவருக்கு உங்களால் அழைப்புக்களை மேற்கொள்ள முடியாது.
இதனை மாத்திரம் வைத்தும் அவர் உங்களை தடை செய்துள்ளார் என்ற முடிவுக்கு வர முடியாது காரணம், அவர் இணைய இணைப்பை துண்டித்திருந்தாலும் எம்மால் அவருக்கு அழைப்புக்களை மேற்கொள்ள முடியாது அல்லவா?
நீங்கள் அனுப்பும் செய்தி அவரை சென்றடைகிறதா? என்பதை அறியுங்கள்.
வாட்ஸ்அப் மூலம் நாம் ஒருவருக்கு செய்திகளை அனுப்பியது தொடக்கம் அது அவரை சென்றடையும் வரை அதன் ஒவ்வொரு நிலைகளையும் அறிந்து கொள்வதற்கு வாட்ஸ்அப் சேவையில் வெவ்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது.
எம்மை தடை செய்தவருக்கு செய்திகளை அனுப்பும் போது ஒரு Tick அடையாளம் கொண்ட குறியீடு மாத்திரமே தோன்றும். |
அதில் சாம்பல் நிற இரண்டு Tick அடையாளங்களை கொண்ட குறியீடு தோன்றினால் குறிப்பிட்ட செய்தி அவரை சென்றடைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இருப்பினும் உங்களை அவர் தடை செய்திருந்தால் இதனை உங்களால் அறிய முடியாது.
இதனை மாத்திரம் வைத்தும் குறிப்பிட்ட நபர் உங்களை தடை செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்த முடியாது. காரணம், அவரது ஸ்மார்ட் போனில் இணையம் தொடர்புபடுத்தப்படாது இருக்கும் போதோ அல்லது அவரது ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆப் (Switch Off) செய்யப்பட்டிருக்கும் போதோ எம்மால் மேற்குறிப்பிட்ட குறியீட்டை அவதானிக்க முடியாது.
வாட்ஸ்அப் குழுவில் இணைக்க
வாட்ஸ்அப் சேவையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இணைத்து குழு உரையாடலில் ஈடுபட முடியும். எனினும் உங்களை ஒருவர் தடை செய்திருந்தால் உங்களால் அவரை குழுவில் இணைக்க முடியாதிருக்கும்.
மேற்கூறிய ஐந்து சந்தர்பங்களிலும் உங்களுக்கு கிடைக்கும் விடை எதிர்மறையானதாக இருப்பின் உங்களை குறிப்பிட்ட நபர் தடை செய்துள்ளார் என அறிந்துகொள்ளலாம். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கில் குறிப்பிட்ட நபரின் இலக்கத்தை இணைத்து மேற்கூறியவற்றை மேற்கொள்ளலாம். இதன்போது நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் எனின் நீங்கள் குறிப்பிட்ட நபரால் தடை செய்யப்பட்டுள்ளது உறுதி.
Post a Comment