மார்ச் 25 படங்கள் - எதிர்பார்ப்பு என்ன.?
This Month Last Friday Release Movie Names...
2016 மார்ச் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான நாளை 25ம் தேதி “தோழா, ஜீரோ, வாலிப ராஜா, அடிடா மேளம்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'தோழா' படத்தைத் தவிர வேறு எந்தப் படங்களும் எந்த விதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படங்களே.
தொடர்ந்து பல படங்களைத் தமிழில் கொடுத்துக் கொண்டிருக்கும் பிவிபி நிறுவனத்தின் அடுத்த படைப்பு 'தோழா', தெலுங்கில் 'ஊப்பிரி' என்ற பெயரில் நாளை இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. மீண்டும் கார்த்தி - தமன்னா ஜோடி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நாகார்ஜுனா, ஆகிய சிறப்புகளுடன் இந்தப் படம் வெளிவருகிறது. பிரெஞ்சுப் படத்தின் மூலக் கதையை வைத்துக் கொண்டு தமிழுக்கு ஏற்றபடி படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். வித்தியாசமாக இருந்தால் ரசிகர்களின் வரவேற்பு நிச்சயம் கிடைக்கும்.
தொடர்ந்து பல தோல்விப் படங்களில் மட்டுமே நாயகனாக நடித்துள்ள அஸ்வின், ஜீரோ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 'நெடுஞ்சாலை' படத்தில் நாயகியாக அறிமுகமாகி, திருமணம் செய்து கொண்டு சென்று விட்ட ஷிவதா இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படமும் ஒரு திகில் படமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் மட்டுமே படத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதைப் படம் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது நாளை தெரிந்துவிடும்.
இதற்கு முன் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகாத 'வாலிபராஜா' படம் நாளை வெளியாகிறது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நாயகனாக நடித்த சேது, இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சந்தானம் படத்தில் இருந்தாலும் நிதிப் பிரச்சனையில் சிக்கியதால் பட வெளியீடு தள்ளிக் கொண்டே போனது. இந்த முறை கண்டிப்பாக வந்துவிடும் என்கிறார்கள். படம் வெளிவந்தாலே அது அவர்களுக்கு வெற்றிதான்.
புதுமுகங்கள் நடித்துள்ள 'அடிடா மேளம்' என்ற படமும் நாளை வெளிவருகிறது. படம் பற்றிய தகவல்களே இதுவரை மீடியாக்களுக்கு வந்து சேரவில்லை. அப்புறம் எப்படி ரசிகர்களைச் சென்றடையும். திரைப்படம் எடுக்க வரும் புதியவர்கள் முதலில் அந்தப் படங்களை எப்படி மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாளைய வெளியீடுகளையும் சேர்த்தால் இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை 50ஐக் கடக்கும்.
Post a Comment