காதலும் கடந்து போகும் – விமர்சனம்
‘சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமரசாமியும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்த படம் என்பதால் ‘காதலும் கடந்து போகும்’ படத்துக்கு எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு.
‘மை டியர் டெஸ்பரடோ’ என்ற கொரியன் படத்தை உரிமை பெற்று ரீமேக்கியிருக்கும் நலன் குமாராசாமி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாய் எடைபோடத்தவறிவிட்டார்.
மாற்று சினிமாவிரும்பிகளைக் கவர்ந்த அளவுக்கு, நடிகனுக்காக விசில் அடிக்கும் சராசரி மசாலாப்பட ரசிகர்களை இந்தப் படம் கவருமா என்பது சந்தேகமே.
காதலும் கடந்து போகும் கதை என்ன?
யாரோ செய்த கொலைக்காக சரண்டர் ஆகி சிறைத்தண்டனை பெற்று வெளியே வந்தவர் விஜய் சேதுபதி.
ஏறக்குறைய கைப்புள்ள டைப்பான ஆள்.
தன்னை ரௌடியாகவே நினைத்துக்கொண்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் லட்சியம் பார் ஓனர் ஆக வேண்டும் என்பது.
நல்ல குடும்பத்தில் பிறந்த தறுதலைப்பெண் மடோனா செபாஸ்டியன்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வரும் மடோனா செபாஸ்டியனுக்கும், உதார் ரௌடி விஜய்சேதுபதிக்கும் இடையில் இயல்பாக உருவாகும் நட்பும், காதலும்தான் – காதலும் கடந்து போகும்.
தமிழ்சினிமாவுக்கு உரித்தான பாவனைகள், பாசாங்குகள் ஏதுமில்லாமல், ‘மை டியர் டெஸ்பரடோ’ படத்தின் ஃப்ளேவர் கொஞ்சமும் குறையாமல் மிதமான வேகத்தில் கதை சொல்லி இருக்கிறார் நலன் குமாராசாமி.
அதுவே படத்தின் பலமாகவும், பலவீனமாகவும் இருவேறு ரசவாதத்தை நிகழ்த்தி இருக்கிறது.
விஜய்சேதுபதிக்கு ரௌடி கதாபாத்திரம் புதிதில்லை. ஆனாலும் சூதுகவ்வும், நானும் ரௌடிதான் படங்களின் சாயல் ஒரு சதவிதிம் கூட வெளிப்பட்டுவிடாத அளவுக்கு நடை, உடை, பாவனை, உடல் மொழியில் வேறுபட்டு, வேறு முகம் காட்டியிருக்கிறார். வெல்டன் விஜய்சேதுபதி.
அதே சமயம் இன்னொரு பத்து வருஷத்துக்கு ரௌடியாக நடிக்க மாட்டேன் என்று அவர் ரசிர்களுக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.
‘பிரேமம்’ மடோனாவுக்கு தமிழில் அறிமுகமாக இதைவிட நல்ல வாய்ப்பு கிடைத்திருக்குமா? சந்தேகம்தான். என்பதை உணர்ந்து, தன்னுடைய பாத்திரத்தின் தன்மையையும் அறிந்து செமத்தியாய் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நலன் குமரசாமியின் வசனங்கள் அவ்வப்போது சிரிக்க வைத்தாலும், திரைக்கதை பொறுமையை சோதித்து விடுகிறது. இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாமோ?
காதலும் கடந்து போகும் என்று தலைப்பு வைத்துவிட்டு கடைசியில் காதலர்களை சந்திக்க வைத்தது தலைப்புக்கு முரண்.
பிரிந்துபோன விஜய்சேதுபதியும், மடோனாவும் கடைசிவரை சந்திக்காமலே இருந்திருந்தால் தலைப்புக்கு நியாயமாகவும், நம் நினைவுகளிலிருந்து இந்தப் படம் கடந்துபோகாமல் காலத்துக்கும் இருந்திருக்கும்.
Post a Comment